வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டுக்கு வெளியே புதர் மண்டிய புற்களை சுத்தப்படுத்தலாம் என்ற எண்ணத்துடன் மண்வெட்டியுடன் மண்ணைக் கிளறிக்கொண்டு இருந்தேன். அங்கு வந்த நண்பர் மார்க்கும், சந்தோஷும் " உள்ளூர் செய்தியிலிருந்து உலகச் செய்திவரை உங்க பத்திரிகைல வருது. இங்க இருக்கிற இருகூர்ல பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு இப்போ விவசாயம் பாத்திட்டிருக்கார் என்றதும் நம்மையும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. மண்வெட்டியை அவரிடம் கொடுத்து புல்லை கொத்த சொல்லி விட்டு பத்தே நிமிடங்களில் குளித்து முடித்து ரெடியாகி "கெளம்பலாம் வாங்க" என்ற படி வண்டியை எடுத்தேன்.
ஒண்டிப்புதூரிலிருந்து திருச்சி சாலையில் கிழக்கு நோக்கி பயணித்தால் இரண்டாவது கிலோ மீட்டரில்
L & T பை பாஸ்க்கு சற்று முன்பாக உள்ள இருகூர் பிரிவு. அதிலிருந்து இடது புறமாக திரும்பி, சிறிது தூரம் சென்றால், நீண்ட நாட்களாக கட்டி முடிக்கப்படாமல் இருந்த இருகூர் பாலம், தற்போது திறக்கப்பட்டு புதுப் பொலிவுடன் காட்சியளிக்கிறது .
இதுவரை இவ்வளவு உயரத்தில் இருந்து பார்த்திராத இருகூரை,
சில்லென்ற காலைப் பனியுடன் பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருந்தது. பாலத்தின் முடிவில் ஊரின் துவக்கம்.
பழமையான ஒரு கோவிலைக் கடந்து இடது புறமாகத் திரும்பி, ஜின்னிங் பேக்டரி ரோட்டை அடைந்த போது  சாலை தோண்டப் பட்டிருந்தது.
அதையும் தாண்டி இருகூர் டூ சின்னியம்பாளையம் சாலையில் ஒரு சிறிய கால்வாயை தாண்டி சிறிது தூரத்தில் இருந்தது நஞ்சப்பன் என்பவரின் தோட்டம்.
கேட்டின் முன் வண்டியை நிறுத்தியதும் முதல் ஆளாக நம்மைப் பார்த்து குறைத்து வரவேற்றது, தற்போது அழிந்து வரும் அறிய வகை நாய்
இனமான சிப்பிப்பாரா எனும் கன்னி வகை நாய்.
முன்பு இந்திய விவசாயிகளின் நெருங்கிய தோழனாக விளங்கிய
இந்த இனம் வேகமாக ஓடுவதில் சிறுத்தைக்கு அடுத்தபடியாக இருக்கும். வேட்டைக்கும் காவலுக்கும் வளர்க்கப்படும் இதைப்  பற்றி விரிவாக ஒரு கட்டுரையே எழுதலாம்.
இளம் விவசாயி சதீஷ் நம்மை கை குலுக்கி வரவேற்றதை கண்டதும் தன குறைப்பை நிறுத்திவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டது.
"இளநீர் சாப்பிடுங்க" என்று உபசரித்தார் சதீஷின் தந்தை ஆறுச்சாமி. இவர் ஒரு முன்னாள் மில் தொழிலாளி. தென் இந்தியாவின் மான்செஸ்டராக இருந்த கோவையில் நூற்பாலைகள்  இழுத்து மூடப்பட்டு தற்போது கல்யாண மண்டபங்களாகவும், அடுக்கு மாடிக் குடிருப்புகளாகவும் மாறி விட்டது.
பூச்சிக்  கொல்லிகளுக்கு சற்றும் சளைக்காமல்,
அதற்கு இணையாக மனித உடலுக்கு ஊறு விளைவிக்கும் சர்வதேச குளிர்பானங்களின் சுவையை விட அதி அற்புதமாக  இருந்தது அவர் தந்த இளநீரின் சுவை.  நாக்கில் பட்டதும் "சுரீர்"  என
உறைத்ததைச் சுவைத்தபடி அவருடன் பேசத் தொடங்கினோம்.

27 வயது நிரம்பிய சதீஷ் குமார் (98425 95433) பி எஸ் சி, எம்பிஏ,
PGDHRM( மனித வளம் மற்றும் மேம்பாடு) ல் முதுகலை பட்டம் பெற்று ஒரு தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். மன அழுத்தம் நிறைந்த அந்தப் பணி அவருக்கு மன நிறைவை தரவில்லை. ஒரு கட்டத்தில் அது சலித்துப் போனது.
விவசாயத்திற்கு வந்ததை அவரே விவரிக்கிறார்.
" எந்திர மயமான இந்த நகர வாழ்க்கை ஒரு கட்டத்துக்கு மேல அலுத்துப்போச்சு. எங்க தாத்தா காலத்தில பாத்த உண்மையான கிராமச்சூழல் இன்னிக்கு எங்கேயும் பாக்க முடியல. அது மாதிரியான ஒரு சூழலை உருவாக்கி முன் மாதிரியா இருக்கணும்னு யோசிச்சேன். அதத்தான் இப்போ இங்க பாக்கறீங்க.
அதுக்காக நான் பாத்திட்டிருந்த வேலைய ராஜினாமா செஞ்சேன்.
வருமானமும்  நண்பர்கள் கிட்ட பேசி ஏலச்சீட்டு தொடங்கினேன். அஞ்சாறு மாசத்தில ஓரளவு பணம் சேந்ததும், விளம்பர நிறுவனம் தொடங்கினேன். அதுலயும் ஓரளவு நிலையான வருமானம் வரத்தொடங்கிச்சு. inime  வருமானத்துக்கு பிரச்சனை இல்லேன்னு தெரிஞ்சதும், சுத்து வட்டாரத்தில குத்தகைக்கு  விவசாய நிலம் கெடைக்குமான்னு தேடினேன். அப்போ தான் விவசாயத்தில் முதிர்ந்த அனுபவம் நிறைந்த நஞ்சப்பன் என்பவரின் நிலம் கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே இயற்கை விவசாயம் செய்து வந்த அவரின் நிலத்தில் என்னுடைய வேலை இன்னும் எளிதாக ஆனது. குத்தகைக்கு கொடுக்கும்போதே கறாராக ரசாயன உரம் உபயோகிப்பதாக இருந்தால் உள்ளே வரவேண்டாம் என்றார். என்னுடைய எண்ணத்தை அவரிடம் விளக்கிய போது சந்தோஷமாக ஒப்புக்கொண்டார்.

குத்தகைக்கு எடுத்ததும் முதலாக தீவனப் பயிருடன் மக்காக்சோளம்
போட்டேன். எங்க கால்நடைகளுக்கு போக மீதியை வெளிய வித்தேன். அதுல கெடச்ச பணத்தில புறா மற்றும் நாட்டுக் கோழிகளை வாங்கினேன். எங்கிட்ட இருக்கிற ஆடு, கோழி, புறா, நாய் எல்லாமே இந்தியாவின் பாரம்பரிய இனங்கள் மட்டும் தான்.
3 ஏக்கர்ல தென்னை இருக்கு. அது போக இப்போ நெறைய தென்னம்பிள்ளை வெச்சிருக்கேன். அதுக்கு ஆட்டுக் கழிவு, மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு மற்றும் கரும்புச் சர்க்கரை இதையெல்லாம் போட்டு அதுக்கு மேல பண்ணைக்  கழிவுகளால மூடி அதுக்கும் மேல தென்னை ஓலைகளை தனித்தனியா பிரிச்சு மூடி வெக்கறேன். பத்து நாளைக்கு ஒருமுறை தான் தண்ணி விடறேன். இந்த முறைல செய்யும்போது ஈரப்பதம் குறையாம இருக்கு. மண்புழு நெறைய உற்பத்தியாகுது.தண்ணீரும் நெறைய மிச்சமாகுது.
தீவனப் பயிருக்கு ஒரே ஒரு முறை மட்டும் களை எடுத்திட்டு ஒரு பாத்திக்கும் அடுத்த பாத்திக்கும் நடுவுல பண்ணைக் கழிவுகளைப் போட்டு அதுக்கு மேல தென்னை ஓலைகளை போட்டு "மூடாக்கு" என்ற முறையில் செய்வதால்  அதுக்கப்புறம்  களைகள் வர்றதில்ல. மேலும் தீவனத் தட்டை அல்லது தட்டைப் பயிறு போன்ற விதைகளை இடைப்பட்ட இடத்தில விதைப்பதன் மூலம் களையும் வருவதில்லை. அதை உட்கொள்ளும் கால்நடைகளும் ஆரோக்யமா இருக்குதுங்க. இப்போ இருக்கிற ஆள் பற்றாக்குறைல வேலைக்கு ஆள் கெடைக்கிறதில்ல. அப்படியே கெடச்சாலும் கூலி கொடுத்து கட்டுபடியாகாது. களை எடுக்க கொடுக்கும் கூலிக்கு தீவனம் வாங்கிரலாம். நான் முதல் முறை, களை எடுக்க கொடுத்த கூலி 8,500 ரூபாய். அதுக்கப்புறம் தான் யோசிச்சேன் இதுமாதிரி செலவுகளை எப்படி குறைக்கலாம்னு. களை எடுக்கும் கருவிகளை வாங்கியோ உபயோகப்படுத்தி இதை செஞ்சிருந்தா கூட இவ்வளவு செலவு வந்திருக்காதோன்னு தோணுது. நம்ம முன்னோர்கள் எவ்வளவோ நல்ல நல்ல உத்திகளை கையாண்டிருக்காங்க. காலப்போக்கில அதெல்லாம் நாம கைவிட்டதோடல்லாமல், களைக்கொல்லி போன்ற உயிர்க்கொல்லிகளை உபயோகிச்சு, மண் வளத்தை கெடுத்து, ரசாயன உரத்தில வெளஞ்ச உணவு தானியங்கள சாப்பிட்டு நம்மளோட மன வளத்தையும் கெடுத்துக்கிட்டோம். காய்கறில கொஞ்சமா ரசாயனம் இருந்தது  இப்போ மாறி, ரசாயனத்தில கொஞ்சமா காய்கறி இருக்கு. அதுவும் நம்ம மூதாதையர்கள் விட்டுசென்ற மிச்சத்தின் எச்சம் தான். ஒரு விஷயத்தில நான் ரொம்ப தெளிவா இருக்கேன். மகசூல் அதிகமா கெடைக்கும்கறதுக்காக வெளிநாட்டு விதைகளையோ, மரபணு மாற்றப்பட்ட விதைகளையோ உபயோகப்படுத்த மாட்டேன் என்றவரிடம் " இதை உங்க மன நிம்மதிக்காக மட்டும் தான் பண்றீங்களா"  என்று கேட்டதும் சற்று சிந்தித்து, சற்றும் தாமதியாமல் "சார், இதை நான் ஆரம்பிக்கும்போது நீங்க சொன்ன மாதிரி என்னோட நிம்மதிக்காக தான் ஆரம்பிச்சேன். ஆனா இப்போ கொஞ்சம் கொஞ்சமா விவசாயத்த பத்தி தெரிஞ்சிக்க தொடங்கும் போதே, இத்தனை லாபம் இருக்கிற விவசாயத்தை ஏன் எல்லாரும் நஷ்டம்னு சொல்றாங்கன்னு புரியல. என்னோட பார்வையில விவசாயம் நஷ்டமில்லாத, நல்ல ரொம்ப லாபம் கொடுக்கற, நிம்மதியான ஒரு தொழில். நம்ம விளைவித்து கொடுக்கற ரசாயனக் கலப்பில்லாத காய்கறி எத்தனை பேர் சாப்பிடறாங்க. அதுவே எவ்ளோ பெரிய சேவை.
அதனால தான் பெரிய பெரிய நிறுவனங்கள் பெரிய அளவில விவசாயத்தில ஈடுபடறாங்க. லாபம் இல்லேன்னா விவசாயத்துக்கு அவங்க ஏன் வரணும் என்றார்.

"சரி முதல் முயற்சியா விவசாயம் பண்ண தொடங்கியிருக்கீங்க. எவ்வளவு வருமானம் வரும்னு எதிர் பாக்கறீங்க? என்றதும் "  வருமானத்துக்கு மொதல்ல சின்னதா காய்கறித் தோட்டம் போடப் போறேன். அதுல அதிக மகசூல் வர்றதுக்காக, தேனீ வளர்க்கும் பெட்டிகளை ஆறு ஏக்கர்லயும் வெக்கறேன். மகரந்தச் சேர்க்கை ரொம்ப அதிகமாவும் வேகமாகவும் நடக்கும்.தேனீக்கள் அதிக தேன் எடுக்க நல்ல லாபம் தர்ற பூ வகையான சம்பங்கியும், வாழையும் பயிரிடப் போறேன். இதனால விளைச்சலும் அதிகமாகும். நெறைய தேன் வர்றதால சுத்தமான தேனை நல்ல விலைக்கு விக்கவும் முடியும்.
மேலும் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை தொழுவதிலோ பட்டி போட்டு அடைத்தோ வைக்காமல், தென்னையின் நடுவே சிறு தானியங்களை பயிரிட்டும் மற்றும் இயற்கையாக வளரும் புற்களை மேய அவற்றை சுதந்திரமாக நடமாட விடுவதால் ஆரோக்யமாகவும் சுதந்திர உணர்வுடனும் இருக்கும்.
வேலை ஆட்களை நம்பி நாங்க இதை செய்யல. அம்மாவும், அப்பாவும், தம்பி முரளியும்  காலைல வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டு தோட்டத்துக்கு வந்திருவாங்க. ஆனந்தமா எங்களால முடிஞ்ச வேலைய சந்தோசமா செய்யறோம். சோர்வு அடையும்போது ஆடு மேய்க்கறது, நாய், முயல், புறா இதுங்க கூட கொஞ்ச நேரம் இருக்கறதுன்னு அதுல கெடைக்கற சந்தோஷம் என் வாழ் நாள்ல இப்ப தாங்க அனுபவிக்கிறேன்.
இதுல இன்னும் நெறைய விஷயங்கள தெரிஞ்சிக்க, அனுபவம் வாய்ந்த விவசாயிகள சந்திச்சு என்னோட சந்தேகங்கள நிவர்த்தி செஞ்சுக்கறேன். எந்த விதமான பண்ணைக் கருவிகளை உபயோகப்படுத்தலாம், குறைவான தண்ணீர்ல எப்படி விவசாயம் செய்யலாம் அப்படிங்கறத பத்தி நெறைய விஷயங்கள ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன்.
காரமடை பக்கத்தில ஒன்னிபாளையம்ன்கிற ஒரு சின்ன கிராமத்தில தான் எங்க தாத்தா தோட்டம். என்னோட சின்ன வயசில, ஸ்கூல் லீவுக்கு அங்க போவோம். அப்போ நான் பார்த்த செடி, கொடி, மரம், ஆடு, மாடு, கோழி, முயல், புறான்னு அதுங்க கூட இருந்த அந்த சந்தோஷம், பன்னாட்டு நிறுவனம் தந்த சம்பளத்த வாங்கும் பொது கொஞ்சம் கூட கெடைக்கல. அதுக்கு மாறாக டென்ஷனும் மன உளைச்சலும் தான் கெடைச்சது. ஆனா இப்போ இருக்கிற நிம்மதி, இந்த சந்தோஷம் கோடி ரூபா கொடுத்தாலும் கெடைக்காது. என்னோட காய்கறி தோட்டத்தில வெளையற காய்கறிய வேற எங்கயோ கொண்டு போய் விக்காம உள்ளூர் மக்களுக்கு குறைந்த விலையில கொடுப்பேன்.
உதாரணமா, அவரைக்காய் இப்போ கடைல 40 ரூபா விக்கிது. ஆனா விவசாயிகிட்ட 15 ரூபாய்க்கு வாங்கறாங்க. அதையே நான் 20 ரூபாய்க்கு கொடுத்தா. சந்தோஷமா வாங்குவாங்க. எனக்கும் ஒரு கிலோவுக்கு அஞ்சு ரூபா அதிகம் கெடைக்கும்.
சுத்தமான தேன் ஒரு கிலோ ஐநூறு ரூபாய்க்கு கடைல கெடைக்குது. அதை 200 ரூபாய்க்கு கொடுத்தாலும் எனக்கு லாபம் தான்.தேன் சேகரிக்க 10 பெட்டி வெக்கறேன். ஒரு பெட்டில வருஷத்துக்கு 10 லிட்டர் கெடைச்சாலும், 10 பெட்டிக்கு 100 லிட்டர். 100 க்ஸ்  ரூ.200 . ரூ. 20,000.

ஆடு இப்போ 10 இருக்கு.ரெண்டு வருஷத்துக்கு மூணு ஈத்து
ஒரு ஆடு ரெண்டு குட்டி போடும். ரெண்டு வருஷத்தில 60 குட்டி.
அதுல எப்படி கொறைஞ்சாலும் ரூ.1,50,000 வருமானம்..

10 தாய்க்கோழி இருக்கு. வருஷத்துக்கு 3 அடை வைக்கும். ஒரு அடைக்கு 15 குஞ்சு.
மொத்தம் 150. ஒரு கோழி ரெண்டு கிலோ எடை போட்டாலும்  300 கிலோ.
நாட்டுக்கோழி குறைஞ்சபட்சம் 200 ரூபாய்க்கு கொடுத்தாலும் வருஷத்துக்கு ரூ.60,000

புறா 25 ஜோடி இருக்கு. ஒரு வருஷத்தில 4 தடவ குஞ்சு பொரிக்கும்.
ஒரு புறா 8 குஞ்சு வரை பொரிக்கும். ஒரு ஜோடி கொறஞ்சது 200 ரூபாய்க்கு கொடுத்தாலும், 400 ஜோடிக்கு வருஷத்துக்கு ரூ.80,000 வருமானம்.
இதெல்லாம் விவசாயத்துக்கு உதவி செய்யற ஆடு, கோழி, புறா, தேனீ  மூலமா வர்ற உபரி வருமானம். இதுல வர்ற வருமானமே என்னோட குடும்ப செலவுகளுக்கு போதும். இதுக்கு அப்புறமா விளைவிக்கற பொருட்களை விற்பனை செய்யறது மூலமா கெடைக்கறது இன்னும் அதிக வருமானம் கெடைக்கும் அதுல சந்தேகமே இல்ல.
இவ்வளவு வாய்ப்புகள் இருக்கும்போது விவசாயத்தை ஏன் சிலபேர் நஷ்டம்ன்னு சொல்றாங்கன்னு புரியல. எந்த தொழிலா இருந்தாலும் அதில சில பிரச்சனைகள் இல்லாம இருக்காது. அதுக்காக அந்த தொழிலே செய்யாம இருக்க முடியுமா. அந்த பிரச்சனைக்கு என்ன தீர்வுன்னு பாக்கணும். மழை இல்ல, தண்ணி இல்ல, ஆள் கெடைக்கல, அரசாங்கத்தோட உதவி கெடைக்கலன்னு பொலம்பிட்டு இருக்காம நம்மால என்ன செய்ய முடியுமோ அத செஞ்சாலே போதும். குறைந்த பட்சம் என்னோட குடும்பதேவையை இப்போ என்னால பூர்த்தி செய்ய முடியுது. ரசாயனமில்லாத இயற்கையான காய்கறி, பழங்கள், சுத்தமான காத்து, இது மாதிரி அவங்கவங்க தேவையை பூர்த்தி செஞ்சதுக்கப்புரமா மீதம் ஆனதை கொறஞ்ச வெலைக்கு வித்துருங்க. விவசாயத்தில லட்ச லட்சமா சம்பாதிக்க முடியும். ஆனா அந்த இலட்சங்கள மட்டுமே மனசில வெச்சிட்டு வேலை செஞ்சிட்டு,  கொஞ்சம் விலை இறங்கினாலும் விரக்தியோட உச்சத்துக்கே போறாங்க. இப்ப சொல்லுங்க விவசாயத்தில நஷ்டம்ன்னு யாரவது சொன்னா என்ன பண்ணலாம்? என்று கேள்வி கேட்ட நம்மிடமே கேள்வியுடன் முடித்தார்.
நாம் இதுவரை சந்தித்த ஏராளமான  விவசாயிகளின் புலம்பல்களை கேட்டிருக்கிறோம். இந்தக்கட்டுரை வெளிவரும் (2014 ஜனவரி) புத்தாண்டில்  இதைப் படிக்கும் லட்சக் கணக்கான வாசகர்களில் சில ஆயிரம் பேரையாவது யோசிக்க வைக்கும்.
இயற்கை விவசாயத்தை நேசிக்க வைக்கும்.சில நூறு பேர்களையாவது இயற்கை விவசாயத்தில் ஈடுபட வைக்கும் என்ற நம்பிக்கையுடன் சதீஷ்குமாரை வளரும் விவசாய தமிழகத்தின் சார்பாக வாழ்த்தி விடை பெற்றோம்.






















 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக