ஞாயிறு, 11 மே, 2014

சுழன்றடித்த  காற்று, வேரோடு சாய்ந்த வாழைகள், வேதனையில் விவசாயிகள்
மேட்டுப்பாளையத்துக்கு அருகில் உள்ள சிறுமுகை. போன  வாரம்  மழை  வருவது  போல் ஒரு தோற்றத்தை உருவாக்கிய ஒரு காற்று, அனைத்து விவசாயிகளையும் ஏமாற்றிச்சென்றது. ஏமாற்றம் மழை வராததால் அல்ல. வந்த காற்று சிறுமுகை தொடங்கி அன்னூர், கரியாம்பாளையம், எளகம்பாளையம், காளப்பட்டி, வெள்ளானைப்பட்டி தாண்டி சூலூர் வரை சென்று, கோரத்தாண்டவம் ஆடி, வாழை மரங்களை சாய்த்து விவசாயிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.சண்முகசுந்தரம் (93628 26262)எதேச்சையாக வெள்ளானைப்பட்டி விவசாயி சண்முகசுந்தரம் அவர்களின் தோட்டத்திற்கு சென்ற போது தான் இதை கூறினார். தோட்டத்தில் சென்று பார்த்த போது பகீரென்று இருந்தது. சிறிது நாட்கள் முன்பு தான் நண்பருடன் சென்று தோட்டத்தை பார்த்தோம். நேந்திரன் வாழைக் குலைகள் அபாரமான வளர்ச்சியை அடைந்திருந்தது. ஒவ்வொரு குலையும் பதினைந்து கிலோவுக்கும் மேல் இருந்தது. அறுவடைக்கு இன்னும் பத்து நாட்களுக்கும் அதிகம் இருந்தது. அதற்குள்  இந்த விபரீதம். "அறுவடை முடிஞ்சிருந்தா பத்து லட்ச ரூபா கிடைச்சிருக்கும். எல்லாம் போச்சு" என்றவருக்கு ஒரு ஆறுதல் மஞ்சளில் நல்ல மகசூல். தற்போது  ஓரளவு  கட்டுபடியாகும்  விலை. அதனால் மனிதர் கொஞ்சம் உற்சாகமானார். இதில் முக்கியமான விஷயம் இவர் விவசாயம் செய்யத்தொடங்கி ஒரு வருடம் தான் ஆகிறது. இப்போது  வீழ்ந்து போன வாழைகள் தான் இவர் முதன் முதலாக நட்டது. முதல் முறை நட்ட வாழைகள் வேரோடு சாய்ந்து மிகப்பெரிய சேதத்தையும், அதை விடப்பெரிய படிப்பினையும் தந்திருக்கிறது. "பட்டம் மாறி வாழை நட்டேன். காத்து குறைவா இருக்கிற நேரத்தில அறுவடை நடந்தா இது மாதிரி நட்டம் வந்திருக்காது.  வாழைல பூ விட்டு குலை புடை தள்ளும் நேரத்தில சவுக்கு பூட்டு வெச்சு முட்டுக் கொடுக்கணும். இன்னும் கொஞ்சம் உறுதியா இருக்கணும்னா நைலான் கயிறால ஒவ்வொரு வாழையையும், கட்டி ஒண்ணோட ஒண்ணா கட்டி பெல்ட்டு போடணும். ஒவ்வொரு வரிசையோட இரண்டு புறமும் இழுத்து கட்டணும். இப்படி செஞ்சிருந்தா ஓரளவு நட்டம் வராம சமாளிச்சிருக்கலாம். முதல் முறை செஞ்ச விவசாயத்தில எனக்கு கெடச்சது கொஞ்சம் காஸ்ட்லி எக்ஸ்பீரியன்ஸ்" என்றார். கேட்கும் போதே கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது.வருத்தப்பட்டுக்கொண்டே வண்டியை எடுத்து அன்னூர் நோக்கி செலுத்தினோம். போகும் வழி எல்லாம் காற்றாடிய கோரத்தாண்டவத்தை பார்த்து கொண்டே சென்று கொண்டிருந்தோம்.
மூர்த்தி (97156 49575) கரியாம்பாளையம் கிராமத்தை அடுத்துள்ள க்ரிஷ்ணாக்கவுண்டன் புதூரைச் சேர்ந்த பழனிச்சாமி மற்றும் மூர்த்தி சகோதரர்கள் (97156 49575) நான்கு ஏக்கரில் வாழை வைத்திருந்தார். அதில் மூன்று ஏக்கர் வாழைகள் காற்றில் நாசமடைந்து விட்டன. இவர் காற்றில் வாழை சாயாமல் இருக்க பெல்ட்டு போட்டு வைத்திருந்தார். அதையும் மீறி வாழைகள் சாய்ந்து விட்டன.                     
பெல்ட்டு போட்டதால் தப்பி பிழைத்து அறுவடை முடிந்த வாழைகள்.  பெல்ட்டு போட்டா வாழை காத்துக்கு சாயாதுன்னு சொன்னாங்க. இங்க இத்தனை  வாழை நாசமாயிருக்கு" என்று கேட்டதற்கு " பெல்ட்டு போட்டா ஓரளவு அடிக்கிற காத்துக்கு தாக்குப் பிடிக்கும். போன வாரம் அடிச்ச காத்து ரொம்ப வேகமா வீசிச்சுங்க. சூறாவளி மாதிரி இருந்தது. சுழட்டி அடிச்சதுல வாழை இல்லை எல்லாம் நாப்பதடி உயரத்துக்கு பறந்தது. பட்டம் மாறி விதைச்சது காரணம்னு சொல்ல முடியாது. சரியா முட்டு குடுத்திருந்தா காப்பாத்தி இருக்கலாமோன்னு  இப்போ தோணுது. அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்திலிருந்து அதிகாரிகள் வந்து பார்த்துச் சென்றிருக்கிறார்கள். அவர்களிடம் ஆலோசனை கேட்டதற்கு யோசித்து சொல்கிறோம் என்று சொன்னார்களாம்.
கிளம்ப ஆயத்தமானோம். " இருங்க டீ சாப்பிட்டு போலாம்" என்றார். இது தான் கோவையின் குணம். என்னதான் நட்டமடைந்தாலும், மனதுக்குள் ஆயிரம் வேதனை இருந்தாலும், வந்தவர்களை உபசரிக்கிறார்கள். நாம் சென்ற போது டெம்போவில் அறுவடையான பொருட்களை வேலையாட்களோடு சேர்ந்து மூர்த்தியும் ஏற்றிக்கொண்டிருந்தார். அவருடைய வேலையை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்து " பரவால்லீங்க, இன்னொரு நாள் அவசியம் வர்றேன் என்ற படி வண்டியை எடுத்தேன்.முன்னொரு  காலத்தில் ஒரு சிற்றோடை இருந்ததற்கான அறிகுறியாக ஒரு பள்ளமும், அதை ஒட்டி சற்று அகலமான கரையும் இருந்தது. அந்தக் கரையின் மீதேறி வண்டியை செலுத்தி மீண்டும் சத்திய மங்கலம் மெயின் ரோட்டை அடைந்தேன்.
மன்னர் காலத்தில் மாதம்  மும்மாரி,  இப்போது  வருடம்  இருமாரிஇனி வரும் காலங்களில் அதுவும் உருமாறி, நம் எதிர்கால சந்ததிக்கு வாழ்நாளில் கிடைக்குமா ஒரு மாரி?
மரங்களை உருத்தெரியாமல் அழித்து, நம் தாயை விட மேலான இயற்கை அன்னையின் வயிற்றில் அடித்து, தாயின் கருப்பையை துளையிடுவது போல் ஆழ்துளை கிணறுகளை துளைத்து, சவக்குழிகளை நமக்கு நாமே தோண்டிக்கொண்டோம். விதைப்பதற்காக தோண்டிய கிணறுகள், நம் குழந்தைகளை புதைப்பதற்காக மாறிவிட்டது. இதை உணர்த்தத்தான் அடிக்கடி குழந்தைகள் அதனுள் சிக்கி, தன்னுயிரை மாய்த்து நமக்கு புரிய வைத்தார்கள். நமக்கா புரியும்?
மரங்களை வளர்க்க வேண்டும். அதன் மூலம் மட்டும் தான் மழை பெய்யும் என்பது அனைவருக்கும் தெரிந்தாலும், வேறு யாராவது வைப்பார்கள் என அனைவரும் ஒதுங்கிப் போனால், வரும் தலை முறை மழை என்பதை யூ ட்யுபில் மட்டும் தான் பார்க்க முடியும். இல்லை என்றால் கேரளாவுக்கோ, கர்நாடகாவிற்கோ அல்லது சிரபுஞ்சிக்கோ சுற்றுலா சென்று மழையை தரிசிக்கலாம். சிறுமுகை தாண்டி எளகம்பாளையம் கிராமம். தங்கராஜ் (9442002917)
முப்பது ஏக்கரில் முழுக்க முழுக்க வாழை விவசாயம் தான்.அதில் ஆறு ஏக்கரில், நேந்திரன் குவிண்டால் வாழைகள், இன்னும் இருபது நாட்களில் அறுவடைக்குத் தயாராக இருந்தது. 5000 வாழைகள் சாய்ந்துள்ளது. மற்ற வாழைகள் அளவில் சிறியதாக இருந்ததால் பெரிய பாதிப்பில்லை.     மொதல்ல பன்றிங்களோட தொல்லை அதிகமா இருந்துது. நைட்டு தோட்டத்துக்குள்ள வந்து பாத்தா பன்றிங்க கூட்டமா வாழைங்கள நாசம் பண்ணிட்டிருக்கும். விரட்டி விட்டா நாலா புறமும் சிதறி ஓடிரும். அதிலேயே சின்ன வாழைக் கன்றுகள் ஒடிஞ்சு விழுந்துரும். அதை தடுக்க வெள்ளை வேட்டிய தோப்புக்குள்ளகட்டி விட்டா, காத்துல ஆடும்போது பன்றிங்க வர்றது குறைஞ்சிருக்கு. இப்போ அடிச்ச காத்து, இதை யாருமே எதிர் பாக்கல.
நான் இதை நேரடியா கேரளாவுக்கு அனுப்பிட்டிருக்கேன். அது மட்டுமில்லாம இந்த சுத்து வட்டாரத்தில இருக்கிற வாழை விவசாயிகளிடம் கொள்முதல் செஞ்சும் அனுப்பறேன். நான் வாழை விவசாயம் மட்டும் தான் பண்றேன். தமிழ் நாட்ல பழங்களுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு இல்ல. கேரளாவில இதை நிறைய உபயோகிக்கறாங்க. விவசாயிகள் கெடைக்கற காசு கெடைச்சா போதும்னு இங்க இருக்கிற வியாபாரிகள் கிட்ட கொடுத்திர்றாங்க. இது மாதிரி நட்டம் வர்ற போது ரொம்ப பாதிக்கப்படறாங்க. இந்த வாழை அறுவடை செஞ்சிருந்தா முப்பது லட்ச ரூபாய்க்கு மேல கெடச்சிருக்கும்" என்று முடித்த தங்கராஜ் வருத்தத்தை வெளிக்காட்டாமல் சிரித்துக் கொண்டே தான் பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் விடை பெற்று கிளம்பும்போது மாலை ஆறு மணியை தாண்டிக் கொண்டிருந்தது.நாம் சென்ற அன்று வெள்ளிகிழமை என்பதால் கோவை வேளாண்மைப் பல்கலை கழகத்தில் இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடர்பு கொள்ள முடியாது. தமிழ் நாட்டில்  வாழை விவசாயம் நடை பெரும் சில இடங்களில், காற்றிலிருந்து வாழைகளை காப்பாற்ற ஒவ்வொரு மரத்திற்கும் மூன்று சவுக்கு கட்டைகளை வைத்து முட்டுக்கொடுப்பார்கள். எவ்வளவு பலமான காற்றையும் அது தாக்குப் பிடிக்கும். ஒரு டன் சவுக்கு மரத்தின் விலை 12,000 ரூபாய். அதில் 600 கட்டைகள் இருக்கும். அதை வைத்து கட்ட ஆகும் செலவு, ஆள் கூலி, இவற்றை எல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் வரும் தொகையை சிறு விவசாயிகளால் செய்ய முடியாது. சரி மாற்று வழியாக என்ன செய்யலாம்?
தோட்டத்தில் எல்லையில் மிக நெருக்கமாக சவுக்கு மரங்களை வளர்க்கலாம். அது காற்றை ஓரளவு கட்டுப்படுத்தும். அதை ஒட்டி அகத்தி வளர்க்கலாம். காற்றை அது இன்னும் கொஞ்சம்  கட்டுப்படுத்தும். சில மாதங்களில் அதுவும் வருமானத்தை ஈட்டத் துவங்கும்.ஓரளவு காற்றைத் தடுக்கும் இது போன்ற மரங்களை வளர்க்கும் போதே, நீண்ட கால பலன் பலன் தரக்கூடிய நல்ல மர வகைகளையும் வளர்க்கத் துவங்கினால் காற்றிலிருந்து வாழைகளை காக்கும் போதே, எதிர்கால சந்ததிக்கு வளமான மரங்கள் உள்ள நிலங்களையும், அதன் மூலம் மாதம் மும்மாரி பொழியும் சூழலையும் கண்டிப்பாக உருவாக்க முடியும். சமூக சேவை என எங்கோ போய் மரம் நட வேண்டாம். வனக்கல்லூரியில் கிடைக்கும் மரங்களை, நமது நிலத்தில் நேரம் கிடைக்கும் போது நாமே வளர்க்கலாம். இந்த உணர்வு நம் விவசாயிக்கு வந்தால், பொருளாதாரத்தில் தன்னிறைவு அடையும் விவசாயியால் இந்த நாடும் தன்னிறைவு அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுக்கெல்லாம் நேரம் இல்லீங்க என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இடத்தை மட்டும் சொல்லுங்கள். எங்கள் தன்னார்வ  தொண்டர்கள் மூலம் அதை செய்யலாம். நம்  நாடு செழிக்க வேண்டுமென்று யாரோ ஒருவர் மட்டும் நினைத்தால் போதாது. நம் அனைவருக்கும் அந்த உணர்வு வர வேண்டும். அது வந்தால் இந்த விஷயங்கள் சுலபமாக நடக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக